Skip to main content

பிரியாணியில் போதைப் பொருள்; அதிர்ந்து போன வழக்கறிஞர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Shocked as the biryani bought at a restaurant in Tiruvallur contained cannabis

 

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அடுத்துள்ள தாமரைப்பாக்கம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது வெங்கல் ஊராட்சி. இங்குள்ள நெடுஞ்சாலை பகுதியின் ஓரமாகப் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ராஜ்குமார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மேலும், இவர் தனது குடும்பத்துடன் வெங்கல் ஊராட்சியில் வசித்து வருகிறார்.

 

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ராஜ்குமார் வெங்கல் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கச் சென்றுள்ளார். அங்கு ஒரு பிரியாணி பொட்டலத்தை பார்சல் வாங்கிக்கொண்டு அதைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில், சுடச் சுட வாங்கி வந்த தந்தூரி பிரியாணியை வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே பொறுமையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது, திடீரென அந்த பிரியாணியில் வித்தியாசமான பொருள் இருப்பதைப் பார்த்ததால் உடனடியாக அலர்ட்டான ராஜ்குமார், அந்த பிரியாணியைச் சாப்பிடாமல் அலசிப் பார்த்துள்ளார். அந்த சமயத்தில், சாப்பிடுவதற்காக வாங்கி வந்த பிரியாணியில் கூல் லிப் எனப்படும் போதை வஸ்து இருந்துள்ளது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். மேலும், நடந்த விஷயத்தைத் தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறி ஆதங்கம் அடைந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், விரக்தியடைந்த ராஜ்குமார் கூல் லிப் கிடந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நேராக அந்த பிரியாணி கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், அந்த கடையில் இருந்த மேசையில் தான் வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தைப் பிரித்துப் போட்டுவிட்டு ஊழியர்களை அழைத்திருக்கிறார். இதனிடையே, என்ன நடந்தது எனப் பதற்றத்துடன் வந்த ஊழியர்களிடம், "என்னது இது... சாப்பிடுற சாப்பாட்டுல ஹான்ஸ் எப்படி வரும். காசு கொடுத்து தானே வாங்குறோம். என்னப்பா இதெல்லாம்" எனக் கோபமாக வாக்குவாதம் செய்தார். ஒருகணம், இதைப் பார்த்து என்ன சொல்வது எனத் தெரியாமல்  ஊழியர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.

 

இதனால் கோபமடைந்த ராஜ்குமார், "இந்த கடைக்கு யாரு ஓனரு? முதல்ல அவர கூப்பிடுங்க. சாப்பிடுற சாப்பாட்டுல இதெல்லாம் எப்படி வரும்" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதன்பிறகு, அந்த பிரியாணி கடையின் உரிமையாளர் வந்தவுடன் அவரிடம் ராஜ்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் ராஜ்குமாரை சமாதானம் செய்யவே முயற்சித்தனர்.

 

இதையடுத்து, இனி இவர்களிடம் பேசினால் சரிவராது என முடிவு செய்த ராஜ்குமார், இந்த சம்பவம் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையில் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் கடைகளில் விற்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதை வஸ்துக்களும் சர்வ சாதாரணமாகக் கிடப்பதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதனை ஒடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது பிரியாணி பொட்டலத்தில் போதை வாஸ்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசுப் பள்ளியில் அடிப்படை வசதி இல்லை; வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
students boycotted lass and protested for basic facilities in govt schoo

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 313 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கூறினாலும் அவர் மாணவர்களைத் தரைக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்து தர வேண்டும் எனக் கூறி பள்ளி நுழைவுவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்பள்ளிக்கு 2021-2022 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஜீவா பணியாற்றிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாகவும் 2021-2022 பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாகவும், 2022-2023 ஆண்டு 88 சதவீதமாகவும் 2023-2024 ஆண்டு 80 சதவீதமாகவும் குறைந்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 2021-2022 ஆண்டு 96 சதவீதமாகவும் 2022-2023 ஆண்டு 81 சதவீதமாகவும் 2023-2024 ஆண்டு 77 சதவீதமாக அவர் பணியில் சேர்ந்த பின்னர் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் . தலைமையாசிரியர் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும், இதனால் இப்பள்ளியில் பணியாற்றிய 12 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் கேட்டு சென்றிருப்பதால் மாற்றாக ஆசிரியர்கள் நிரப்பப்படாததால் 24 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 12 ஆசிரியர்கள் இருப்பதால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக இப்பள்ளி ஆந்திரா எல்லையொட்டி அமைந்திருப்பதால் தெலுங்கு பேசும் மாணவர்கள் வசதிக்காக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடப்பிரிவு நடத்தப்பட்டு வருகின்றன. ஆந்திரா மாநிலத்தில் உள்ள அழகிரிப்பேட்டை, ஸ்ரீராமபுரம், மலகுண்டா, பங்காளம், கொடியம்பேடு, ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் தெலுங்கு தாய் மொழி பாடப்பிரிவு எடுத்து பயின்றவருகின்றனர். 

students boycotted lass and protested for basic facilities in govt schoo

கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் தெலுங்கு பாடப்பிரிவு பயின்ற நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் தெலுங்கு மாணவர்கள் யாரும் சேரவில்லை. பள்ளியில் கல்வித்தரம் வெகுவாக குறைந்து வருவதால் பெற்றோர்கள் மாணவர்களை வேறொரு பள்ளியில் சேர்த்து வருவதால் அப்பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் 450 ஆக இருந்தது. அது இந்தக் கல்வி ஆண்டில் 300 ஆக வெகுவாக குறைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரனிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கொண்ட பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலந்து சென்றனர் இந்தப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

பெயிண்ட் ஆலையில் தீ விபத்து சம்பவம்; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
Condolence of Tamil Nadu Chief Minister for Fire incident in paint factory

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று (31-05-24) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, ‘திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், காக்களூர் கிராமத்தில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ZEN PAINTS என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில், இந்நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சென்னை. அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி (55) க/பெ.பக்தவச்சலம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த  பார்த்தசாரதி (51) த/பெ. புவனேந்திரன் மற்றும் சென்னை, அம்பத்தூர். விஜயலட்சுமிபுரம். பிரகாசம் தெருவைச் சேர்ந்த புஷ்கர் (37) த/பெ.கணேசன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (37) த/பெ. இருசப்பன் என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.