நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவது மிகவும் பிரசித்தமானதாகும். 18-ம் நூற்றாண்டிலிருந்தே சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவது முக்கியத்துவமானதாகும். சிவாலயம் ஓடும் பக்தர்கள் விரதம் இருந்து இன்று (18-ம்தேதி) ஓட்டத்தை துவங்கினார்கள். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து தொடங்கிய சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திகரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிக்கோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவிலில் முடிவடையும்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் 108 கி.மீ தூரம் கொண்டது. கேரளா மற்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கால்நடையாக நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களிலும் சென்று 12 கோவில்களையும் தரிசிக்கின்றனர். காவி வேட்டி, காவித் துண்டு அணிந்து கொண்டு கையில் விசிறி, திருநீருடன் கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். சிவாலய பக்தா்களுக்கு வழி எங்கிலும் தாகம் தீர்ப்பதற்காக மோர், பானகம், எலுமிச்சை சாறு அது போல் கஞ்சியும் பூசணிக்காயை கொண்டு எாிசோி குழம்பும் மேலும், கூட்டு பொரியல்களுடன் சாப்பாடு வழங்குகின்றனர்.
சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மேற்கு மாவட்டத்தில் சாலைகள் எங்கும் அந்த பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. மேலும், பக்தர்களுக்கு வசதியாக 12 சிவாலயங்களுக்கும் செல்லும் விதமாக போக்குவரத்துத் துறை சாா்பில் மார்த்தாண்டத்திலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.