கல்லணை கால்வாயில் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பாசனப்பகுதிகளில் ஓடி ஏரி, குளங்களை நிரப்பி கடைசியில் நாகுடி மும்பாலை ஏரியில் தனது ஓட்டத்தை முடித்துக் கொள்கிறது.
கடந்த மாதம் 12 ந் தேதி மேட்டூரில் முதலமைச்சர் திறந்துவிட்ட தண்ணீர் 16 ந் தேதி கல்லணையில் இருந்து திறந்த தண்ணீர், புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் 20 ந் தேதி வந்து 21 ந் தேதி மேற்பனைக்காடு – வேம்பங்குடிக்கு இடையே பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களில் பாய்ந்து ஓடியது. சுமார் 15 மணி நேரம் விவசாயிகளும், ஒப்பந்த ஊழியர்கள் போராடி உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து அடுத்த நாள் முழுமையாக சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தண்ணீர் வந்தபோது, மேற்பனைக்காடு வான்வழி செய்தி மையம் அருகே ஆயிங்குடி பொதுப்பணித்துறை கட்டப்பாட்டில் உள்ள சுமார் 300 ஏக்கர் பாசனம் உள்ள ஜெகநாதன் ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஷட்டர் சுவர்கள் உடைந்து கால்வாயில் தண்ணீரில் கொட்டியது. இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் சுவர் உடைந்திருப்பதால் இரவு நேரத்தில் தண்ணீர் அதிகமாக வரும்போது, கரையில் அறிப்பு ஏற்பட்டு உடைந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.
பல வருடங்களாக உடைந்து சேதமடைந்திருந்த ஷட்டர் சுவரை சீரமைக்காத கல்லணைக் கோட்ட அதிகாரிகள் தற்போது உடைந்த பிறகும் சீரமைப்பை தாமதம் செய்து வருகின்றனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் ஆபத்துகளை தடுக்கலாம்.