தர்மபுரியில், புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர், ஒருநாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. ஒப்பந்ததாரரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தரமற்ற கட்டுமானப் பொருள்களால் கட்டியதால்தான் இடிந்து விழுந்ததாக சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
தர்மபுரியில், ஒட்டப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆண்கள் விடுதியில் இருந்து நீச்சல் குளம் வரையிலான ஒரு கி.மீ. தொலைவிற்கு புதிதாக கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடக்கின்றன. இதற்கான பட்ஜெட், 2 கோடி ரூபாய்.
சேலம் முதன்மைச் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட அலுவலகம் மற்றும் காவல்துறை எஸ்பி அலுவலகம் எதிரில், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்தன. கட்டுமானப் பணிகள் முடிந்து, அதற்கான முட்டுகள் எல்லாம் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில்தான், அக்., 12, 13 ஆகிய நாள்கள் தர்மபுரியில் மழை பெய்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் எதிரில் கட்டப்பட்டிருந்த கழிவுநீர் வாய்க்கால் சுவர் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், சிறு மழைக்கே தாங்காத கழிவுநீர் வாய்க்கால் இடிந்து விட்டதால், எங்கே விசாரணையில் சிக்கிக் கொள்ளப் போகிறோமோ என்ற அச்சத்தில் இடிந்து விழுந்த சாக்கடை கால்வாய் சுவரை எக்ஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் அவசர அவசரமாக அடித்து நிரவி சமன்படுத்தினர். தரமற்ற கட்டுமானப் பொருள்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர் இடிந்து விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''கடந்த 2014- ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானப் பொருட்களால் அந்தப் பாலம் கட்டப்பட்டதால்தான், குறுகிய காலத்திலேயே இடிந்து போயிருப்பது தெரியவந்தது. அப்போது அந்தப் பிரச்னையில் தொடர்புடைய பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான், தர்மபுரியிலும் கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டிமுடிக்கப்பட்ட இரண்டொரு நாளில் லேசான மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. நல்வாய்ப்பாக இதனால் யாருக்கும் எந்த விதச் சேதாரமும் ஏற்படவில்லை. கழிவுநீர் வாய்க்காலின் பக்கவாட்டுச் சுவர்கள் கட்டும்போது இரும்பு கம்பிகளால் செண்டரிங் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இடிந்து விழாமல் இருக்கும். ஆனால், தற்போது இடிந்து விழுந்த கழிவுநீர் வாய்க்கால் சுவர்கள் இரும்பு கம்பியால் ஆன செண்டரிங் செய்யப்படாமல்தான் கட்டப்பட்டன. அதனால்தான் சிறு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் தரமற்ற கட்டுமானப் பொருள்களும்கூட காரணமாக இருக்கலாம்.
கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளனர். அவர்கள் அதிகளவில் கமிஷன் எடுத்துக் கொள்வதால்தான் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு இப்பணிகளைச் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
இதுபற்றி நாம் தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரிடம் பேசினோம். ''சார்... கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டும் பணிகள், சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை உள்ளூரைச் சேர்ந்த இக்பால் என்ற ஒப்பந்ததாரர்தான் எடுத்துச் செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று காலையில்தான் கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டிமுடிக்கப்பட்டது. அன்று மாலையே கனமழை பெய்தது. அப்போது வாய்க்கால் சுவருக்கு சப்போர்ட்டாக வைக்கப்பட்டு இருந்த முட்டுகள் நகர்ந்துவிட்டன. அதனால்தான் கழிவுநீர் வாய்க்கால் சுவர்கள் இடிந்துள்ளன. சுமார் 10 மீட்டர் தூரத்திற்குதான் சேதம் அடைந்துள்ளன. அதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய்தான். பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க சார்...,'' என்றார் தனசேகர்.
சேதத்தின் மதிப்பு சின்னதோ பெரியதோ... விரயமாக்கப்பட்டது மக்களின் வரிப்பணம் என்பதை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.