சென்னை பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் நேற்று (04-12-24) தண்ணீர் அருந்தியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் 6க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் கூடி குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா. மோ. அன்பரசன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கு குடிநீர் காரணமில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட மீனால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீரைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.