வேலூரில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களை திருடி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் இருந்து எட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக வாகன திருட்டுகள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தது. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர மற்றும் தாலுகா போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போலீசின் இன்பார்மர்ஸ் மூலமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் பைக் திருட்டு வழக்குகளில் ஏற்கனவே சிக்கியவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் உள்ளி கூட்டு ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு வந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்த பொழுது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. உடனடியாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை அவர்கள் திருடியது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து எட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட தினகரன் (25), சந்தோஷ் குமார் (28), நேதாஜி (35), சந்தோஷ் (23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருசக்கர வாகனங்களை திருடி, அதனை விற்பனை செய்து அதன் மூலம் மது அருந்தி வந்ததாகவும் உல்லாசமாக செலவு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.