Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
Senthil Balaji Case  Hearing again today in the Supreme Court

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை  தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து  தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வு முன்பு நேற்று (24.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், ‘பிணை கோர வழிமுறை உள்ளது’ என வாதங்களை தொடங்கியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினர்.

Senthil Balaji Case  Hearing again today in the Supreme Court

அதில் அவர்கள், “செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?. பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், ‘பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது’ எனக் கூறினர்.

அதற்கு நீதிபதிகள், ‘நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்குக் கூட அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை. இன்று (ஜூலை 24) பதில் இல்லையென்றால் நாளை (ஜூலை 25) பதிலோடு வாருங்கள்’ என்று கூறி வழக்கை இன்றைக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (25.07.2024) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

சார்ந்த செய்திகள்