திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது அலுவலகத்தில் இருந்து துரத்தி வந்துள்ளனர். சாலையில் ஓட ஓட விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலுக்கு பாதுகாப்பாக ஒரு விலை உயர்ந்த இன்னோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்தப்பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக்கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.
இந்த தகவலை கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலைக்காரர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு முன்னாள் அமைச்சரான நிலோபர் கபில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? இன்னோவா காரில் வந்து பக்காவாக ப்ளான் செய்து கொலை செய்தார்கள் என்றால் இதன்பின்னால் மிகப்பெரிய ஆட்கள் இருக்க வாய்ப்புள்ளது என சந்தேகிக்கும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் வாணியம்பாடி நகர பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் வாணியம்பாடி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, டில்லி குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.