
13 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்திற்குத் தீர்வு கிடைத்துள்ளதால் ஆசிரியர் ஒருவர் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் தனக்குச் சொந்தமான பூர்வீக நிலத்தை அளந்து தனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்து தருமாறு, கடந்த 2010 ஆம் ஆண்டு செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது நிலத்தை அளவீடு செய்து பட்டாமாற்றம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இவ்வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பட்டாமாற்றம் செய்து தராத வட்டாட்சியரைக் கண்டித்ததோடு, செல்வமணிக்கு இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாயும் அதற்கான ஒன்பது சதவீத வட்டி மற்றும் வழக்குச் செலவு ஆகியவற்றைச் சேர்த்து வட்டாட்சியர் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் செந்துறை வட்டாட்சியர் உட்பட அங்கிருந்த அலுவலர்கள் அனைவரும் அலட்சியம் செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர் செல்வமணி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத் தீர்ப்புப்படி வட்டாட்சியர் நடந்து கொள்ளவில்லை என்று மேல்முறையீடு செய்தார். இதை விசாரணை செய்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா அளித்த தீர்ப்பில், செந்துறை வட்டாட்சியர், ஆசிரியர் செல்வமணிக்கு இழப்பீடாக ரூபாய் 49,700 செலுத்த வேண்டும். தவறினால் அவரது காரை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டார். தற்போது நீதிமன்றம் அறிவித்த 49,700 ரூபாய் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் வட்டாட்சியர் செலுத்தினார். இது குறித்து ஆசிரியர் செல்வமணி 13 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.