
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “அரியலூர் அனிதா மரணத்திற்குப் பின்னர் நீட் தேர்வு தேவையா எனத் தேசம் முழுவதும் கேள்வி எழுந்தது. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளே நுழைந்து. தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் ரத்து மசோதாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி ஒரு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு இதுவரை அமைந்ததில்லை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது என ஒரு பரப்புரையைச் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தடுப்பணையில் நீட் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு சங்கல்ஃப் என்ற இயக்கம் மனுதாரராகப் போய் நிட்டை நடத்தலாம் என அனுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள்.
நீட் நடத்துவதில் ஆளுநரும், பிரதமரும் தீர்மானமாக உள்ளனர். நீட் என்பது பல கோடி வருமானம் தரக்கூடிய விஷயமாக மாறி உள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது, ஆசிரியர்களே தேர்வு எழுதுவது, சட்டத்தில் இல்லாததை எல்லாம் மோடியின் அரசு நீட்டில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. நீட் வணிகமயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் அலுவலகத்தை திறக்கிறார்கள். பள்ளிகளில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்விற்கும் இலட்ச கணக்கில் பணத்தை கட்ட வேண்டும். கிராம புறமானவர்கள் எப்படி இதில் சேர முடியும்? ஏழை எளிய மாணவர்கள் இந்த தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவர்? இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது மாமனிதன் என்று சொல்லக்கூடிய மோடிக்கும், மத்திய அரசுக்கும் தெரியவில்லை.
நீட் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த தற்கொலை விவாகரத்தில் பிரதமர், மத்திய அரசும் மௌனமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு குழந்தைகள் தேர்வு எழுதச் சென்றால் ஆடையை கத்தரிப்பது, தாலி உள்ளிட்ட ஆபரணங்களைக் கழட்ட சொல்லும் ஆணையம், பணம் கொடுப்போருக்குச் சாதகமாக இருக்கிறது. தேசிய தேர்வு முகமையில் எப்படிப்பட்ட அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை வலது இடது புறங்களில் வைத்துக்கொண்டு நடக்கும் இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி இப்போதே நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை மாநிலங்கள் எப்போது ஏற்றுக் கொள்கிறதோ அப்போது நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுவரை நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர வேண்டும்” விடக்கூடாது" என்றார்.