தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற போதை பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருகிறார்கள். இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபுவுக்கு பொதுமக்களிடம் இருந்துவந்த புகாரை அடுத்து திருச்சி கீழவாளாடி பகுதியில் உள்ள ஒரு கடையிலும் அதனை ஒட்டிய உரிமையாளரின் வீட்டிலும் சுமார் 60 கிலோ பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு கடையிலும் அவரது வீட்டிலும் சுமார் 30 கிலோ தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலவாளாடியில் உள்ள ஒரு கடையில் 1.5 கிலோவும் பறிமுதல் செய்து அதே இடத்தில் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று கடைகளையும் சேர்த்து, மொத்தம் சுமார் 90 கிலோ தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு இடங்களிலும் வழக்கு தொடுப்பதற்காக 7 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.