Skip to main content

“இதற்கெல்லாம் நான் அஞ்சுவதோ, பயந்து ஓடுகின்ற ஆளோ கிடையாது”  - சீமான் பேட்டி!

Published on 27/02/2025 | Edited on 27/02/2025

 

Seeman says I am not afraid of all this, nor am I someone who runs away in fear

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இதனையடுத்து தான் அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டார்.இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) அன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிபதி, ‘விஜயலட்சுமி இந்த வழக்கைத் திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ என்று கூறி சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வாரக் காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். அதில் இன்று (27.02.2025) காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மனில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவில்லை. மேலும் அவர் கட்சிப் பணிக்காக கிருஷ்ணகிரி சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்குச் சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘ விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.

இந்த சம்மனைக் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரைச் சீமான் வீட்டுக் காவலாளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது இது தொடர்பாக விசாரிக்க சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை காவலாளி தாக்கியுள்ளார். இதனையடுத்து வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்குச் சீமான் மனைவி காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாகப் பேசுகையில், “இது கேவலமான ஒரு நடவடிக்கை. காவல்துறை இந்த வழக்கில் 3 மணி நேரம் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். திருப்பியும் சம்மன் அனுப்பி அதே வாக்குமூலத்தைத் தான் பதிவு செய்ய உள்ளனர். காவல்துறையினர் திரும்ப என்னை அசிங்கப்படுத்த இதனைச் செய்கின்றனர்.

Seeman says I am not afraid of all this, nor am I someone who runs away in fear

இந்த வழக்கில் இவ்வளவு தீவிரம் காட்டுகின்ற அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திலும் இவ்வளவு தீவிரம் ஏன் காட்டவில்லை?. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஒட்ட வேண்டும். இதற்கெல்லாம் அஞ்சுவதோ, பயந்து ஓடுகின்ற ஆளோ நான் கிடையாது. நாளைக்குத் தான் வர வேண்டும் என்று சொன்னார்கள் நான் வர முடியாது என்று சொன்னேன். நாளைக்குத் தர்மபுரியில் கட்சிப் பணி உள்ளதால் ஆஜராக முடியாது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்