திருமணமாகி சட்டபடி விவகாரத்து ஆகாத பெண் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த புகாரில் தருமபுரி பாஜக மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி அருகே ஒட்டப்பட்டி என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவசக்தி (44). பாஜக தருமபுரி மாவட்ட துணைத்தலைவராகவும், ஜருகு ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வரும் சிவசக்தியை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவசக்தி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 147, 294(b), 323, 307 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டிருக்கிறது. சிவசக்திக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இந்நிலையில் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள சமத்துவன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவரது மகளான தமிழரசி என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்தால் வெடித்திருக்கிறது பிரச்சனை. தமிழரசியின் கணவர் கணேசன் (32) என்பவர் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டியில் இருக்கும் சிவசக்தி வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.
'தனக்கும் தன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறிது காலம் பிரிந்திருக்கிறோம். சட்டப்படி விவகாரத்து கூட பெறவில்லை. இப்படியிருக்கும் நிலையில் என் மனைவியை நீ எப்படி திருமணம் செய்துகொண்டாய்' எனக் கேட்டதோடு, தமிழரசியை தன்னோடு அழைத்துச்செல்ல வந்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி, அவரது அடியாட்களை வைத்து கணேசனை கடுமயைாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேசன், அதியமான் கோட்டைப் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசக்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். கைதாகியுள்ள சிவசக்தி, சில மாதங்களுக்கு முன்பு ஜருகு கிராமத்தில் ராஜசேகர் என்பவரின் சலூன் கடையினை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினார். இது தொடர்பாக ஏற்பட்ட அடிதடி பிரச்சனை தொடர்பாக தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.