சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% உள் இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும். 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் பி.இ. படிப்பில் 10,000 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைவர். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும். கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள்" என தெரிவித்தார்.