பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. புரசைவாக்கம் மண்டல உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். முன்னதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்பிபிடி கட்சியின் நிர்வாகிகள் பலரின் வீட்டில் கடந்த 24 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.