அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர் காய்ச்சல் இருந்ததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து, அரசு அறிவிப்பின்படி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கி, பள்ளிகளும் இயங்க ஆரம்பித்துவிட்டன. அரசின் விதிப்படி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு வகுப்புகளில் குறைந்த அளவு மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். மாறாந்தை கிராமத்திலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 - 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் சுமார் 450 பேர் ஷிஃப்ட் முறையில் வகுப்பறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில் அந்தப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தொடர் காய்ச்சல் இருந்திருக்கிறது.
விதிப்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யும்போது அவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்திருக்கிறது. தகவலறிந்த மாறாந்தை கிராமத்தின் ஆராம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறையினர் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்து கரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16ஆம் தேதி அன்று பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் 30 பேருக்கும், செப்டம்பர் 17ஆம் தேதி அன்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 40 பேருக்கும், மறுநாள் சிலர் எனத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையே ஆரம்ப சுகாதார நலத் துறையைச் சேர்ந்த குத்தால ராஜ், ஆலங்குளம் மருத்துவ அலுவலர் முஹம்மது தாரிக் உள்ளிட்ட குழுவினர் கடந்த 4 நாட்களாகவே மாணவர்களுக்கு கரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். அதன் முடிவு அடுத்த இரண்டு நாட்களில் வரத் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து ஆரம்ப சுகாதார நலத்துறையினரோ, "கடந்த 4 நாட்களாக காய்ச்சல் கண்டறியப்பட்ட மாணவர்களுக்குக் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் டெஸ்டுக்காக ரத்த மாதிரி எடுத்ததில், அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. அதன்பின் எடுக்கப்பட்ட தொடர் டெஸ்ட்களுக்குப் பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. கரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும் மாணவர்களுக்கு இருப்பது சாதாரணக் காய்ச்சல் என்றே தெரிகிறது. அதனையறியும் பொருட்டு மலேரியா டெஸ்ட்டுக்கும் போயுள்ளது. அதன் முடிவு விரைவில் வந்துவிடும்" என்கிறார்கள்.
இதனிடையே பள்ளி ஆசிரியர்களில் ஒரு சிலர் விடுப்பில் போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தகவலறிந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன், பள்ளியை ஆய்வுசெய்து ஆசிரியர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த தொடர் காய்ச்சல் சம்பவம் ஆலங்குளம் வட்டாரத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறது.