நடப்பு கல்வியாண்டில் கரோனா காரணமாக, பள்ளி வகுப்புகள் முழுமையாக நடைபெறாத நிலையில், இறுதித் தேர்வுகள் மே 13- ஆம் தேதி வரை நடந்தன. அதே நேரத்தில், கோடை காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மட்டும் வந்தால் போதுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்புகளுக்கு மே 14- ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுவதாகவும், ஜூன் மாதம் 13- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்டவை ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. மேலும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் பள்ளி திறப்பு தாமதமாகும் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு பள்ளி திறக்கும் நாள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.