இந்திய முப்படைகளின் உயரிய பதவியான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று (08/12/2021) காலை கோவையில் வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் போது, குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி மற்றும் விமானப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதில் ஹெலிகாப்டரின் கேப்டன் வருண் சிங், 80% தீக்காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, உயர்தர சிகிச்சைக்காக வருண் சிங் இன்று (09/12/2021) பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுமார் 500 மாணவியர், ஆசிரியப் பெருமக்கள் முதல்வர் பழனிசெல்வம் நிர்வாக இயக்குநர் எஸ்.கே. ராஜேஸ்கண்ணா ஆகியோர் இன்று (09/12/2021) காலை பிபின் ராவத் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி பூ தூவி மலரஞ்சலி செலுத்தியவர்கள், அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர்.
அது சமயம் மாணவ மாணவிகளின் மத்தியில் பேசிய பள்ளியின் முதல்வர் பழனிசெல்வம் பிபின் ராவத்தின் தேச சேவையினை கண்ணீருடன் நினைவு கூறினார்.