![School student lost their live after falling from bus](http://image.nakkheeran.in/cdn/farfuture/NKa5ERk29YiJT4NW6lTx-WZvIzHHvCz4dGmIevxm8ag/1691775793/sites/default/files/inline-images/a1042.jpg)
காட்பாடியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் காட்பாடியில் உள்ள டான் போஸ்கோ தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு அரசுப் பேருந்தில் செல்லும் போது காட்பாடி - குடியாத்தம் சாலையில் படியில் இருந்து தவறி விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறையினர், மாணவன் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.