ஆத்தூர் அருகே, அரசுப் பள்ளி மாணவிக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஜன. 25- ஆம் தேதி வரை பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள், ஆத்தூர் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
அதே விடுதியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் தளவாய்ப்பட்டி, தேக்கம்பட்டியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில், கூலித்தொழிலாளியின் மகளுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதால், தும்பலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஜன. 21- ஆம் தேதி தெரிய வந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாணவி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், வகுப்பில் ஒன்றாக படிக்கும் மாணவிகள் என மொத்தம் 66 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். ஆசிரியர்களுக்கும், 66 மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
எனினும், மாணவிகள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய்த்தொற்று அபாயம் கருதி, பெரிய கிருஷ்ணாபுரம் அரசுப்பள்ளி வரும் 25- ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு, கடந்த 19- ஆம் தேதி எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவி ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.