காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணூட்ட மருந்துகளை கொண்டு வந்து, புதிய லேபிள் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்பி, விளைபொருட்களில் விஷம் கலக்கும் மிகப்பெரிய நெட்வொர்க் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள ஒரு கொட்டகையில் பல வருடங்களுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வந்து புதிய லேபிள் ஒட்டி கீரமங்கலத்தில் உள்ள ஒரு மருந்துகடை மற்றும் மருந்துக்கடைகாரர் வீடுகளில் வைத்து புது அட்டைப் பெட்டிகளில் அடுக்கி புது மருந்தாக உள்ளூர் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி மொத்த மொத்தமாக ஒரு கும்பல் விற்பனை செய்வதாக வேளாண்துறை அதிகாரிகளிடம் நேரடியாக புகார் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு சில விவசாயிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் பல நாட்கள் காலம் தாழ்த்தியுள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை வேளாண் உதவி இயக்குநர்கள் திருவரங்குளம் வெற்றிவேல், அறந்தாங்கி பத்மபிரியா ஆகியோர் தலைமையில் வேளாண் அலுவலர்கள் பாக்யா, புவனேஸ்வரி மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள கொட்டகையில் ஆய்வு செய்த போது 2013 முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காலாவதியான நூற்றுக்கணக்கான பூச்சிக்கொல்லி, நுண்ணூட்ட மருந்து பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
கீரமங்கலம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் இமானுவேல் முன்னிலையில் அனைத்து காலாவதியான மருந்துகளையும் கைப்பற்றி சாக்கு மூட்டையிலும் அட்டைப் பெட்டிகளிலும் அள்ளி கீரமங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த தோட்ட உரிமையாளர் மாதவன், இந்த காலாவதியான மருந்துகளை குறைந்த விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு தெளிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து கீரமங்கலம் காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு பூட்டப்பட்டிருந்த மருந்துக்கடைக்கு சென்ற வேளாண்மை அதிகாரிகள் கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு கடையை சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல உடல்நலமின்றி வெளியூரில் இருப்பதால் தற்போது வரமுடியாது என்று கடைக்காரர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி, கீரமங்கலம் எஸ்.ஐ. குமரவேல் ஆகியோர் கடை மூடியிருப்பதைப் பார்த்து புதன் கிழமை கடையை திறந்து சோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதுவரை வேறு யாரும் கடையை திறக்காமல் இருக்க போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கடைக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தனர். கடையை திறக்கும் போது உள்ளே காலாவதியான மருந்துகள் புது லேபிள் ஒட்டி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், கீரமங்கலத்தில் நல்ல மருந்துகள் கிடைக்கும் என்று நம்பி பல கி.மீ கடந்து வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இப்போது காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.