கல்விக்கடன் காப்பீட்டுத் தொகை ரூபாய் 34.10 லட்சத்தை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்த எஸ்.பி.ஐ உதவி மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாநகர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வருகிறது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் காந்தி நகர் கிளை. இந்த வங்கியில் கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (38). இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்விக்கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கிக்கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவர் காப்பீட்டுத் தொகையை செலுத்தியும் கணக்கில் சேராமல் உள்ளதாக வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து, வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் 137 நபர்கள் செலுத்திய கல்விக்கடன் காப்பீட்டுத் தொகையான 34,10,622 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் போலியான கணக்கு காண்பித்து தன்னுடைய இரு வங்கிக்கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, யோகஸ்வர பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது வங்கி நிர்வாகம்.
இந்த மோசடி குறித்து எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் யோகேஸ்வர பாண்டியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மோசடி செய்த மொத்தப் பணத்தையும் யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இழந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து யோகஸ்வர பாண்டியனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.