யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சங்கருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 16 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்கள்) பதிவு செய்யப்பட்டன. அதோடு இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 5 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இத்தகைய சூழலில் சி.எம்.டி.ஏ. (CMDA) அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம், சவுக்கு சங்கரைத் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த பரபரப்பான சூழலில் தான் சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கர் தன் மீது போடப்பட்டுள்ள 16 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (14.08.2024) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அருக்கு நிவாரணம் வழங்கியிருந்தது. இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்கிய அடுத்த நாளே அவர் மீது உடனடியாக குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியதாகச் சொல்லி தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையாக இதனைப் பார்க்கிறோம்” என வாதிடப்பட்டது.
அப்போது கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “ நாங்கள் சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கிய தினத்தன்றே குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா” எனக் கேள்வி எழுப்பினார். அதோடு சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. அதே சமயம் தலைமை நீதிபதி சவுக்கு சங்கர் மீது எந்த விதமான கடுமையான எடுக்கக் கூடாது என்று கூறி தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளார். சவுக்கு சங்கர் மீது என்ன வழக்குகள் எல்லாம் பதிவு செய்து நிலுவையில் உள்ளது என்ற விவரங்களைப் பட்டியலாகத் தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.