வரும் அக்டோபர் 14 மற்றும் அக்டோபர் 15- ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் சனிக்கிழமையான அக்டோபர் 16- ஆம் தேதியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அக்டோபர் 16- ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை காரணமாக, வெளி மாவட்டங்களில் தங்கிப் படித்து வரும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.