தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார். மேலும் உயிரிழந்த இருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் தாயும், மகள்கள் என நான்கு பேரும் மகளிர் ஆவர். அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தை கருதி அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் நிவாரணைத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சாத்தான்குளம் சம்பத்தைக் கண்டித்து சென்னை விருகம்பாக்கம் வியாபாரிகள் சங்கத்தினர், கடையடைப்பு செய்து ஜெயராஜ் மற்றும அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற அனைவரையும் போலிசார் கைது செய்து விருகம்பாக்கம் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். வியாபாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.