ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மழை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஃபெஞ்சல் புயல் காரணமாக அதீத கனமழை பெய்து வருவதால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே புயல் காரணமாக தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல், பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழலையிலும் தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்துவரும் தூய்மை பணியாளர்களின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.