அரசிற்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைப்பெற்று வருவதாகவும், அதற்கு உள்ளூர் வருவாய்த்துறையும், காவல்துறையும் உடந்தையாக இருக்கின்றார்கள் என மாவட்ட நிர்வாகத்தினை நோக்கி பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் அரசிற்கு எதிரான கோபத்தில் இருக்கின்றார் படுக்கப்பத்து மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமத்தில் அரசிற்கு சொந்தமான நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இதில் கடந்த 17/02/2019 இரவு முதல் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரம் மூலம் சட்ட விரோத மணல் திருட்டு நடைப்பெற்றதால் அங்குள்ள பொதுமக்களால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் பயனில்லை.
"இது தொடர்பாக சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் பேசினோம். அவரோ, " எங்க ஊர் பொதுமக்களின் வேண்டுகோள் படி குளத்தை சுத்தம் செய்ய சொன்னேன் என்றும் வேலையை உடனே நிறுத்துகிறேன், மண் அள்ள சொல்லவில்லை" என்று சொல்ல, தட்டார்மடம் காவல்நிலைய அதிகாரிகளோ, "தாசில்தார் அனுமதியோடு சீட்டு போட்டு தான் மணல் அள்ளுகிறார்கள்" என்று சொல்லுகிறார்கள்.
''எங்களின் தொடர் அழுத்தத்தால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் இரவோடு இரவாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு 4 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி பிர்க்கா ஆய்வாளர் முன்னிலையில் சம்பவ இடத்திலேயே நிறுத்தி சென்றார். எனினும் காவல்துறை ஆதரவுடன் இன்று வரை மணல் திருட்டு நடைபெறுகின்றது. இதனால் மணல் திருட்டில் அரசுக்கு பல கோடி இழப்பு என்பதனைக் காட்டிலும் அப்பகுதியின் நீர் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டம் தான்" என்கின்றனர் படுக்கப்பத்து கிராம மக்கள். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.