Skip to main content

மணல் கடத்தல் புகாரில் போலீசாரால் துரத்தப்பட்டவர் சடலமாக மீட்பு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

sand theft in incident in thiruvannamalai

 

திருவண்ணாமலையில் மணல் கடத்தல் தொடர்பாக போலீசாரால் துரத்தப்பட்ட நபர் ஆற்றோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவர் மாட்டுவண்டி மூலம் செய்யாற்றில் மணல் திருடி விற்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் (15.07.2021) மணல் கடத்தல் தொடர்பாக 6 போலீசார் முரளியை தேடிவருவதாக தகவல் வெளியானது. இதனை அறிந்துகொண்ட முரளி, வீட்டைவிட்டு வெளியே ஓடியுள்ளார். தப்பியோடிய முரளியை 4 போலீசார் பின்தொடர்ந்து துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

 

போலீசார் துரத்தியதன் காரணமாக வீட்டைவிட்டு ஓடிய முரளி அன்று மாலைவரை வீடு திரும்பாத நிலையில், அன்று இரவு வம்பலூர் ஆற்றுப்படுகையில் முரளி சடலமாக கிடப்பதாக தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளூர் டி.எஸ்.பி, திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ஆகியோர் விசாரணை மேற்கொண்ட பின்னர் முரளியின் சடலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில், முரளியிடம் இருந்து 2 மாட்டுவண்டிகள் மட்டும்தான் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை நாங்கள் துரத்திக்கொண்டு செல்லவில்லை, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முரளி எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக முரளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்