Skip to main content

மூடப்பட்ட மணல் ரீச்; மௌனம் காக்கும் அதிகாரிகள்; தொழிலாளர்கள் போராட்டம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

sand reach incident in trichy together farmers and labourers 

 

திருச்சி மாவட்ட விவசாயிகள், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடிமங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ரீச் பகுதியிலும் மாட்டு வண்டிகள் மூலம்  காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக மணல் ரீச் மூடப்பட்டுள்ளது. 

 

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை திருச்சி சுப்பிரமணியன்புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கனிம மற்றும் கண்காணிப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுகுறித்து பேசுகையில், “மணல் ரீச்சை நம்பி 2400 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் ரீச்சை மூடிவிட்டனர். இதனால் 2,400 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லாரிக்கு வடுககுடி, புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. இச்செயல் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படுத்தப்படுகிறது. நாங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களைக் கொண்டு மணல் அள்ளுகிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களுக்கு சரியாக பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் இப்படியே மௌனம் சாதித்தால் குடும்பத்துடன் வந்து நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.