தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபல சாமியார் ராஜ்குமார். கையில் குச்சியை வைத்துக்கொண்டு அவரை தேடி வருபவர்களை அந்த குச்சியால் குத்தி பார்த்து அருள்வாக்கு சொல்வதும் இவரது வழக்கம். இதனால் அந்த பகுதியில் முக்கிய சாமியாராக அறியப்பட்ட ராஜ்குமார் ருத்ர சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இவரை தேடி சிங்கப்பூரிலிருந்து ஒரு பக்தர் வந்துள்ளார். தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை நீங்கள் அங்கு வந்து தனது சகோதரரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த கையோடு அவருடைய செலவிலேயே சிங்கப்பூருக்கு ருத்ர சித்தரை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் ருத்ர சித்தர் சென்ற இடத்தில் இப்படி நிகழும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், காரணம் அங்கு கூட்டி செல்லப்பட்ட இடத்தில் இவரை போன்றே வேறொரு சாமியார் இருந்தார். அப்பொழுது இரு சாமியார்களுக்குள்ளும் யார் உண்மையான சாமியார் என்ற போட்டி ஏற்பட்டது. திடீரென பட்டுக்கோட்டை சாமியாரின் கழுத்தை காவி துண்டோடு பிடித்த சிங்கப்பூர் சாமியார் ''திருட்டு வேலை செஞ்சுக்கிட்டுருக்கியா டா'' என தகாத ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டையை துவங்கினார். 'நீ அகோரிதான' என கேள்வி எழுப்பிய சிங்கப்பூர் சாமியார் ''என் கண்ணை பார்.. கண்ணை பார் டா'' என அடுக்குமொழியில் பேச, பட்டுக்கோட்டை சித்தர் பயத்தில் உறைந்தார்.
அந்த அறையின் கதவு பூட்டப்பட்டதால் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தார் ருத்ர சித்தர். ''இதுக்குதான் கூப்பிட்டாயா நீ'' என பரிதாபமாக அழைத்து சென்ற நபரை பார்த்து கேட்டார் ருத்ர சாமியார். எப்படியோ இறுதியில் கதவை திறக்கும் சூழல் ஏற்பட, அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார் பட்டுக்கோட்டை சித்தர். ஆனால் அந்த நேரத்திலும் விடாத சிங்கப்பூர் சாமியார் வேட்டியை எட்டிப்பிடிக்க, நிராயுதபாணியாக வீதிக்கு ஓடினார் பட்டுக்கோட்டை சித்தர். பின்னர் வெளியே வந்துவிட்டோம் என்ற தைரியத்தில் சிங்கப்பூர் சாமியார் மீது சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தை வசைச்சொற்களால் வெளியேற்றிய ருத்ர சித்தர், அப்படியே காரில் ஏறி சிங்கப்பூர் போலீசாரிடம் புகாரளித்து விட்டு தமிழகம் திருப்பினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இவர் காரைவிட்டு இறங்கினால் பாதம் நோகக் கூடாது என்பதற்காக பூக்கள் போட்டு அதன் மேல் நடந்து வர வைப்பார்களாம் இவரது பக்தர்கள். பாவம் பட்டுக்கோட்டை சித்தர்.