நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார். தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.