ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்றான ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்புக்கு முன்பு இந்த விழா நடத்தி முடிக்கப்படும்.
இந்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் வந்ததால், கோடா விழா தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் மே 26ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, விழா குறித்த அறிவிப்பை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ரோகிணி கூறுகையில், ''ஏற்காட்டில் 44வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 2ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக மலர்க்கண்காட்சி மட்டுமின்றி காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன,'' என்றார்.
மலர்க்கண்காட்சிக்கென பல்வேறு வகையான மலர்களைக் கொண்ட பூந்தொட்டிகள் தோட்டக்கலைத்துறை சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளன. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடக்கிறது.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, ஐசிடிஎஸ் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகுப்போட்டி நடத்தவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.