தமிழகத்தில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பதற்கான உலகளவிலான ஒப்பந்தத்தை செயில் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. ஒப்பந்தம் எடுப்பதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரராததால், இதற்கான அவகாசத்தை மேலும் இருபது நாள்களுக்கு நீட்டித்துள்ளது செயில்.
இரும்பாலை தனியார்மயமாக்கலைக் கண்டித்தும், செயில் நிர்வாகத்திற்கு எதிராகவும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் இரும்பாலையை வாங்க விரும்பும் நிறுவனங்கள் ஆலை செயல்பாடுகளை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனத்தினர் எப்போது வேண்டுமானாலும் ஆலைக்குள் வரலாம் என்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், இரும்பாலை தொழிலாளர்கள் திங்கள்கிழமை (ஆக. 5) காலை முதல் ஆலையின் நுழைவு வாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''தொழிலாளர்களின் பல்வேறுகட்ட போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் மத்திய பாஜக அரசு இந்த ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்க விரும்பும் நிறுவனத்தினர் இந்த ஆலையை பார்வையிட வருவதாக தகவல் கிடைத்தது. விலைக்கு வாங்கும் நோக்கத்தில் யார் வந்தாலும் ஆலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவோம். அதற்காகவே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றனர்.