உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து கூரியர் சர்வீஸ் மூலம் நூதனமுறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய கும்பல் தலைவன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்தப் பொருள்களை விற்பதும், பதுக்கி வைத்திருப்பதும் கிரிமினல் குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய இரு துறைகளிலும் வழக்குப்பதிவு செய்யப்படும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறிப்பாக சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் சொகுசு பேருந்துகள் மூலம் புகையிலை பொருள்கள் கடத்தி வரும் கும்பல் ஒடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யும் கும்பல், கூரியர் சர்வீஸ் மூலம் நூதன முறையில் கடத்தலை தொடங்கி உள்ளனர். சேலம் கந்தம்பட்டி சித்தர் கோயில் சாலையில் செயல்பட்டு வரும் ஃபெடக்ஸ் எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்தில் புகையிலை பொருள் பார்சல்கள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டு உள்ளதாக சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த முகேஷ் என்பவரிடம் இருந்து சேலம் கிச்சிப்பாளையம் ஜலால்புரா அதியமான் தெருவை சேர்ந்த அப்துல் சலாம் சித்திக் என்பவர் பெயருக்கு 21 பார்சல்களும், அதே நபரிடம் இருந்து நெத்திமேடு புதூர் இட்டேரி சாலையைச் சேர்ந்த ரேகா எஸ் இண்டஸ்ட்ரீஸ் பெயருக்கு 2 பார்சல்களும் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்திற்கு வந்திருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை தருவித்து, உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்ததாக அப்துல் சலாம் சித்திக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அஜ்மல், ஆரிப், அன்வர்பாஷா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சித்திக்கின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அங்கிருந்து 4 லட்சம் ரூபாய் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 30 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ புகையிலை பொருள்கள் சித்திக் வீட்டில் இருந்தன.
சோதனை நடந்த வீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சித்திக் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இதற்கு முன்னரும் அவர் தொடர்ந்து சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை கடத்தி வந்து உள்ளூர் கடைகளுக்கு விநியோகம் செய்தாரா? காவல்துறையினர் தெரிந்தே கண்டும் காணாமலும் இருந்தனரா? என்ற கேள்விகளும் காவல்துறை வட்டாரத்திலேயே எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, சித்திக் உள்ளிட்ட நால்வர் மீதும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.