ஓமலூர் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மயில்வாகனன் (50) என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மயில்வாகனன் மீது அண்மையில் புகார்கள் கிளம்பின. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் அழுது புலம்பினார். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்திற்குத் திரண்டு சென்று ஆசிரியர் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, காவல்துறையினர் மயில்வாகனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜூ அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வருவது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.