Skip to main content

சேலத்தில் திருநங்கை மீது காவல் ஆய்வாளர் சரமாரி தாக்குதல்! ஆணையரிடம் புகார்!!

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

 


சேலத்தில் சாலையோரம் நின்றிருந்த திருநங்கை மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

e


சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் எதிரில் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடங்களில் இரவு நேரங்களில் திருநங்கைகள் நின்று கொண்டு போவோர் வருவோரை பாலியல் தொழிலுக்காக கைதட்டி அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் திடீரென்று இதுபோன்ற திருநங்கைகளை அடித்து விரட்டுகின்றனர். பின்னர் சில நாள்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர்.


இந்நிலையில், ஏப்ரல் 30, 2019ம் தேதியன்று இரவு புதிய பேருந்து நிலையம் எதிரில், ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம் அருகே, இரண்டு திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தவறான நோக்கத்திற்காகத்தான் நிற்கின்றனர் என்று கருதிய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் கையில் லட்டியுடன் திடீரென்று அங்கு சென்றார். அவர் கண்முன் தெரியாமல் திருநங்கைகள் இருவரையும் தாக்கினார்.


தாக்குதலுக்கு பயந்து ஒரு திருநங்கை தப்பி ஓடிவிட்டார். ஆனால் மற்றொரு திருநங்கை தடியடி தாங்க முடியாமல் சாலையிலேயே படுத்து புரண்டார். அவரை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல முயன்றபோது, ஏற மறுத்து அடம் பிடித்தார். இதனால் ஓமலூர் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான திருநங்கையின் பெயர் சனா (25) என்பதும், சேலம் 5 சாலை அருகே ஸ்டேட் வங்கி குடியிருப்பு பகுதியில் தங்கி இருக்கிறார் என்பதும் தெரியவந்தது. கண்மண் தெரியாமல் திடீரென்று தாக்குதல் நடத்திய ஆய்வாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மே 1ம் தேதி காலை, திருநங்கைகள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.


இந்த தாக்குதலில் சனாவின் முழங்கை, கால், மார்பு பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் பெண்கள் பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 


இதுகுறித்து திருநங்கை சனா கூறுகையில், ''சம்பவத்தன்று இரவு 8.30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் எதிரில் சாலையோரம் நின்றிருந்தேன். திடீரென்று அங்கு வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர், என்னை எதுவுமே விசாரிக்காமல் கையில் வைத்திருந்த ரப்பர் லட்டியால் தாக்கினார். அப்போது அவர் சீருடையில் இல்லாமல் மப்டி உடையில் இருந்தார்.


அவர் தாக்கியதில் நிலைகுலைந்து சாலையில் கீழே விழுந்தேன். அப்போதும் விடாமல் என்னை தரதரவென்று இழுத்துச்சென்று அடித்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னிடம் விசாரிப்பதாக இருந்தால் காவல்துறை வாகனத்தில்தான் ஏற்றிச்சென்றிருக்க வேண்டும். ஆனால் அவரோ, ஆட்டோவில் ஏறும்படி வற்புறுத்தினார். அதற்கு மறுத்தபோதும் மீண்டும் தாக்கினார். என் மார்பகங்களை பிடித்து அழுத்தினார். மார்பகங்கள் வலிக்குது வலிக்குது என்று கூச்சல் போட்டும் விடாமல் தாக்கினார்.


இந்த சம்பவம் நடந்ததற்கு மறுநாள், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தோம். முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் புகார் அளித்திருக்கிறோம். நான் கடைகடையாக கைத்தட்டி காணிக்கை வசூலித்து பிழைத்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடச்செல்கிறேன். என்போன்ற திருநங்கைகளுக்கு சேலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.


இதுபற்றி நாம் சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேலிடம் கேட்டபோது, ''சார்....இதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. இதபத்தியெல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கீங்க? அந்த திருநங்கை வழிப்பறியில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கு. அவங்க சொல்றாங்கனு எல்லாம் கேள்வி கேட்கிறீங்களே? விசாரிக்கணும் ஆட்டோல ஏறும்மானு சொன்னதுக்கு ஏற மாட்டேனு அடம் பிடிச்சி ரகளை பண்ணினாங்க. அதுக்காக ரெண்டு தட்டு தட்டினேன். அவ்வளவுதான். தாக்கியதில் காயம் ஏற்பட்டுச்சுனு சொல்றவங்க எதற்காக 24 மணி நேரம் கழிச்சு மருத்துவமனையில் அட்மிட் ஆகணும்? என் மீது கமிஷனர்கிட்ட புகார் கொடுக்க போனாங்க. அவர்களைத்தான் கமிஷனர் எச்சரித்து அனுப்பினார்,'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Govt bus incident Tragedy of the young woman

 

அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அலமேலுமங்கைபுரம் என்ற கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் முத்துமாரி (வயது 23) என்ற இளம்பெண் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் ஒருவர் பலி

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

virudhunagar sattur atchankulam cracker fire incident 

 

விருதுநகர் மாவட்டத்தில் சில இடங்களில் உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்தனமாக பட்டாசு உற்பத்தி செய்வது தொடர்ந்து நடக்கிறது. சில காரணங்களால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்வதில்லை.

 

சாத்தூர் அருகிலுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர், அந்த கிராமத்தில் ஸ்ரீ வேணி என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். தனது பட்டாசு கடைக்கு அருகிலேயே செட் போட்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் அந்த செட்டில் பட்டாசுகளைத் தயாரித்தபோது, திடீரென்று  வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர் ஒருவரது உடல்  சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வெடி விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தேடி வருகின்றனர்.

 

விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. பட்டாசு கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், டூ வீலர் இரண்டும் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வெடி விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.