உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (டிச. 9, 2019) தொடங்க உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களுக்கு முதல்கட்ட, இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 11.1.2020ம் தேதி நடக்கிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு வழங்கப்படும். அதன்படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு இளநீல நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் முதல்கட்ட, இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 385 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கும், 3597 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் என, இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4299 பதவிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து திங்கள்கிழமை (9.12.2019) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 16.12.2019. இம்மனுக்கள் மீதான பரிசீலனை 17.12.2019ம் தேதி நடக்கிறது. மனுவை திரும்பப்பெறுதல் நாள் 19.12.2019. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பெறப்படும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் 27.12.2019 தேர்தல் நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 30.12.2019ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இத்தேர்தலையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.