சேலம் மாவட்டம், தலைவாசலில் அரசுத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மும்முடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் என்பவரின் மகள் கங்கையம்மாள் (10) என்ற சிறுமி, 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமுருகவேல் (57) வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பினிடையே அவர் பாடம் தொடர்பாக ஒரு சிறுமியிடம் கேள்வி கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி பதில் தெரியாமல் திருதிருவென விழித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திருமுருகவேல், தான் வைத்திருந்த பிரம்பை எடுத்து அந்தச் சிறுமியை நோக்கி வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமியின் அருகில் அமர்ந்து இருந்த மாணவி கங்கையம்மாளின் கண் மீது விழுந்தது. வலியால் துடித்து மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை அழைத்துக்கொண்டு சேலம் மற்றும் மதுரையில் உள்ள கண் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்துவிட்டு, சிறுமிக்கு ஒரு கண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய்விட்டதாகக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு பெற்றோர் உடைந்து போனார்கள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் திருமுருகவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தலைவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் திருமுருகவேலை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வித்துறை அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.