Skip to main content

அரசு மருத்துவமனையில் தீ விபத்து; அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Salem Govt Hospital incident due to electrical leakage in refrigerator says ma.subramanian

 

ஈரோட்டில்  சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துச்சாமி, எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் இரண்டு நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். நான்கு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சிறிய மின் கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

 

மருத்துவ கழிவை எரிப்பது சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழையால் சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை சரி செய்ய 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1397 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக 220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025 க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.