சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நேற்று (12.06.2024) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி லட்சுமணன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயதுக் குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேகத்தடை இருப்பதால் மெதுவாகச் சென்ற லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பேருந்தின் ஓட்டுநர் ரமேஷை வீராணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.