சேலம் தாதம்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (33). ரவுடியான இவர், கடந்த மாதம் அம்மாபேட்டை சேர்மன் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணனை வழிமறித்து கத்தி முனையில் 7 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டதாக கூறப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாக திலீப், கக்கன் காலனியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பிணையில் வெளியே வந்த பிறகும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.
அவரால் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதாகக் கருதிய மாநகர காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தனர். ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் ரவுடி திலீப் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான கைது ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பிடம் காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.