Skip to main content

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த சேலத்தின் பிரபல ரவுடி போலீஸ் என்கவுண்டரில் கொலை

சேலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். 

 

kathir


சேலம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்திலும் அடைத்து வருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சேலம் மாவட்ட காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் பிரபல  ரவுடியை சுட்டுக்கொன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர் என்கிற கதிர்வேல் (28). இவர் மீது 3 கொலை வழக்குகள், 9 வழிப்பறி வழக்குகள் காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பராமரிக்கப்படும் போக்கிரித்தாள் (ஹிஸ்டரி ஷீட்) ஆவணமும் கதிர்வேல் மீது பராமரிக்கப்பட்டு வருகிறது. 

 

kathir


பிரபல ரவுடியும், திமுக பிரமுகருமான காட்டூர் ஆனந்த் என்பவருடன் அல்லக்கையாக கதிர்வேல் சுற்றி வந்தார். எப்போதாவதுதான் வீட்டுக்கு வந்து செல்வார் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.


கடந்த ஏப்ரல் 5ம் தேதி, வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (31) என்பவர் மர்மமான முறையில் இறந்தார். விசாரணையில், அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும், வாகன விபத்தில் அடிபட்டு கணேசன் இறந்ததுபோல் சாலையில் சடலத்தை கிடத்தி நாடகமாடி இருப்பதும் தெரிய வந்தது. 


இந்த வழக்கில் கதிர்வேல், காட்டூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் முருகன், கோபி, பிரபு ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் மே 1ம் தேதி, கதிர்வேலை வீராணம் காவல்துறையினர் கைது செய்தனர். காரிப்பட்டி காவல்துறையினர் அவரை தேடி வந்ததால், கதிர்வேலை அவர்களிடம் வீராணம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.


''பல்வேறு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் கணேசனும் எங்களுடன் வந்தார். அதில் கிடைத்த பணம், நகைகளை பங்கு போடுவதில் கணேசனுக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால் அவரை நாங்கள் திட்டமிட்டு கொலை செய்து, சடலத்தை சாலை நடுவில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டோம்'' என்று கதிர்வேல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கதிர்வேலை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டியில் உள்ள ஒரு ஆலமரத்தின் பொந்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார்.


அதைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்துக்கொண்டு காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி, எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் குள்ளம்பட்டிக்குச் சென்றனர். அங்கே ஆலமரத்தின் பொந்தில் இருந்து கத்தியை எடுத்த கதிர்வேல், திடீரென்று காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றார். கத்தியை கீழே போடுமாறு எச்சரித்தும் அவர் ஆய்வாளர் சுப்ரமணி, மற்றும் உதவி ஆய்வாளர் மாரியை தாக்கினார். இதில் சுப்ரமணிக்கு மார்பு, கை ஆகிய இடங்களிலும், மாரியின் இடது கையிலும் கத்தி வெட்டு விழுந்தது.

 

kathir


இதையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் சுப்ரமணி, தன்னிடம் இருந்த 9 எம்.எம். ரக பிஸ்டலால் கதிர்வேலை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில் அவருடைய மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். 


கதிர்வேலின் சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவை, வீடியோ கேமராவிலும் பதிவு செய்யப்பட்டது. என்கவுண்டர் நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி. தீபா கனிக்கர் நேரில் பார்வையிட்டார். காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 


இது ஒருபுறம் இருக்க, என்கவுண்டர் பின்னணியில் வேறு ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. 


ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இளவரசி (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் காதலருடன் கடந்த மார்ச் 22ம் தேதி நள்ளிரவு சேலத்தில் இருந்து  பெங்களூக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தின் அடியில் முள்புதர் ஓரமாக அந்த ஜோடி  ஒதுங்கியுள்ளது. 


அப்போது திடீரென்று அவர்களை நெருங்கிய 6 பேர் கும்பல், இளவரசியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்ததுடன், காதலன் கண் முன்னாலேயே தவறாகவும்  நடத்த முயற்சித்துள்ளது. ஆனால், இளவரசி தன்னிடம் உள்ள நான்கரை பவுன் சங்கிலியை கொடுத்ததால் அவர்களை அந்த கும்பல் விட்டுவிட்டது. இதுகுறித்து விசரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கும்பல் ஏற்கனவே சில பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது  தெரிய வந்தது.


பொள்ளாச்சியில் நடந்ததுபோல் சேலத்திலும் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற யூகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளும் செய்திகள்  வெளியிட்டன. அதற்கு இன்று வரை காவல்துறை மறுப்பு கூறவில்லை. இந்நிலையில் முறுக்கு வியாபாரி கணேசனுக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இருப்பதும்,  அவர் நடந்த விவரங்களை அப்ரூவராக மாறி, காவல்துறையிடம் பகிரங்கமாக தன் கூட்டாளிகள் அனைவரை பற்றியும் கூறினார். அதைத்தொடர்ந்துதான் கொண்டலம்பட்டி பெரிய புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், சுபாஷ், இளங்கோ, தினேஷ், தைலானூரைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கதிர்வேல் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.


காவல்துறையில் தங்களைப் பற்றி போட்டுக்கொடுத்ததால்தான், கணேசனை திட்டமிட்டு கதிர்வேல், காட்டூர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகள் போட்டுத்தள்ளியதாகவும்  சொல்லப்படுகிறது. 


பட்டர்பிளை மேம்பாலம் சம்பவத்தின் முழு பின்னணியை ஒப்புதல் வாக்கமூலமாக அளித்த கணேசன் கொல்லப்பட்டுவிட்டார். அவரை கொன்ற முக்கிய கொலையளியை காவல்துறையினர் திட்டமிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொன்றுவிட்டனர். இதன்மூலம் பாலியல் பலாத்கார வழக்கை ஊற்றி மூடப்பார்க்கிறது காவல்துறை என்ற யூகங்களும் வலுவாக கிளம்பியுள்ளன. 


அதேநேரம், காவல்துறையில் சரண் அடைய வந்த கதிர்வேலை திட்டமிட்டே சுட்டுக்கொன்றுவிட்டு நாடகமாடுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.