Skip to main content

சேலம் மாநகராட்சி: வசூலாகாத பல கோடி ரூபாய்; தணிக்கை பணிகள் தொடக்கம்... கலக்கத்தில் ஊழியர்கள்! 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Salem Corporation: crores of rupees not collected; Audit work begins

 

சேலம் மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக வசூலாகாத குத்தகை பாக்கித் தொகை குறித்த தணிக்கை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள வரித்தண்டலர்கள், ஆர்.ஐக்கள், ஏ.ஆர்.ஓக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. இவை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஆகிய பிரிவில் 2750 பணியாளர்கள் உள்பட, முதன்மை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் வரித்தண்டலர்கள், ஆர்.ஐ, ஏ.ஆர்.ஓ, பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், சிப்பந்திகள் என மொத்தம் 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். 


பணியாளர்களின் ஊதியத்திற்காக மட்டுமே மாதத்திற்கு 11 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டாகவே மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் இனங்கள் சரியாக வசூலாகாததாலும், எதிர்பார்த்த அளவுக்கு குத்தகை இனங்கள் விலை போகாதது, அப்படியே பெரிய அளவில் குத்தகை போனாலும், ஏலத்தொகை வசூல் ஆகாதது உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
 

மேலும், உலக வங்கிக்கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வாடகை உள்ளிட்ட அனைத்து இனங்கள் மூலம் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தாண்டாது என்கிறார்கள். அதாவது, செலவுக்கேற்ற வகையில் வருவாய் இல்லை என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான நாளங்காடிகள், காய்கறி கடைகள், பாதையோர கடைகள், பூ மார்க்கெட், இறைச்சி அறுவைக் கூடங்கள், வாகன நிறுத்தக் கூடங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர், ''மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்தக்கூடங்கள், தினசரி மார்க்கெட்டுகள், பூ மார்க்கெட் உள்ளிட்ட இனங்களை பெரும்பாலும் திமுக, அதிமுக பிரமுகர்கள்தான் பினாமிகள் பெயரில் ஏலம் எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே குத்தகைதாரர்கள், ஒரு நூதன உத்தியைப் பின்பற்றுகின்றனர். குத்தகை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கடைக்காரர்களிடம் வாடகை மற்றும் தண்டல் வசூலித்து விடுகின்றனர். பின்னர் அவர்கள், தாங்கள் ஏலம் எடுத்த இனத்தில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று,  ஏதாவது சாக்குபோக்கு சொல்லி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று விடுகின்றனர். 


குத்தகைதாரர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களே இப்படியான யோசனைகளைச் சொல்லி, நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியை ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் சுதாகர், 40 லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி வைத்திருக்கிறார். அவர் வழங்கிய இரண்டு காசோலைகளும் வசூலாகாமல் திரும்பி வந்துவிட்டன. அவரிடம் பாக்கியை வசூலிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆர்.ஐ சண்முகம், குத்தகை விடப்பட்டபோது பொறுப்பில் இருந்த ஏ.ஆர்.ஓ பார்த்தசாரதி, அதன்பிறகு அந்தப் பணியிடத்திற்கு வந்த ஏ.ஆர்.ஓ செந்தில்முரளி ஆகியோர் பாக்கியை வசூலிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான பின்னணி காரணம் என்னவென்றும் தெரியவில்லை. 


ஒரு சிலரின் அலட்சியத்தால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை தொடர்கிறது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களுக்கு வசூலிக்கப்படும் காசோலைகள் பல ஆண்டுகளாக ரொக்கமாக்கப் படாமல், வங்கியில் இருந்து மாநகராட்சி காசாளர் வசமே திரும்பப் பெறப்பட்டு வரும் நிலை உள்ளது. 


தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், யு.டி.ஐ.எஸ் எனப்படும் மாநகராட்சி வலைதளத்தில் ஒவ்வொரு குத்தகைதாரரும் செலுத்த வேண்டிய பாக்கி தொகை விவரமும் உள்ளீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் சிலர் திட்டமிட்டே குத்தகைதாரர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்களின் முந்தைய ஆண்டின் பாக்கி விவரங்களை யு.டி.ஐ.எஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. அதாவது, குத்தகைதாரர்களின் நிலுவைத்தொகை ஏதேனும் இருப்பின், அதை வெளிப்படையாக காட்டாமல் நடப்பு ஆண்டிற்குரிய கேட்பு விவரம் மட்டுமே சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால் குத்தகை பாக்கித்தொகை வசூலாகாமல் பேரிழப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறார்கள் ஊழியர்கள். 


இதுகுறித்து சேலம் மாநகராட்சி உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி குத்தகை இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் இதுவரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி வசூல் மற்றும் குத்தகை பாக்கியை வசூலிப்பதில் மெத்தனமாக செயல்பட்ட பில் கலெக்டர்கள், ஏ.ஆர்.ஓக்கள் உள்ளிட்டோர்தான் பாக்கித்தொகையை வசூலிப்பதில் முழு பொறுப்பேற்க வேண்டும். சூரமங்கலம் மண்டலம் சேர்மன் ராமலிங்கம் நாளங்காடி குத்தகை தொகை நிலுவை வசூலாகாமல் உள்ளது குறித்து ஆர்.ஐ சண்முகத்திடம் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக சூரமங்கலம் மண்டலத்தில் தணிக்கை பணிகளும் நடந்து வருகின்றன'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்