/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SALEM 5632.jpg)
கரோனா தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள 60 கோட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்புப் பணிகள், மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வெளி மாவட்டம்/ வெளி மாநிலங்களில் பணிபுரிவோர் இருந்தால் அதன் விவரம், நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, புற்று நோய் ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள் விவரம் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களைக் கணக்கெடுப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களின் அடிப்படையில், பொதுமக்களைத் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தொடர் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்ளும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏதாவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் களப் பணியாளர்களிடமோ அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0427- 2212844 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவோ அல்லது பிற பணிகளுக்காக தங்களது வீடுகளுக்கு வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்களின் விவரங்களைப் பொதுமக்கள் கண்டிப்பாகக் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் தெரிவித்திட வேண்டும்.
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள், தங்களுடைய வீடுகளுக்கு உரிய அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்சொன்ன விவரங்களை எவ்வித விடுபடுதலுமின்றி சரியான முறையில் தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)