![salem collector office visually challenged person govindan and his grandson sridhar](http://image.nakkheeran.in/cdn/farfuture/0AlqsYQ3ErI5XePPGyCeSQZzRvIMXFIdB6SaArfY8xU/1685443444/sites/default/files/inline-images/0001-salem-art.jpg)
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்டம் மல்லியகரை என்ற பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர் கோவிந்தன் என்பவர் தனது 7 வயது பேரன் ஸ்ரீதர் உதவியுடன் மனு அளிக்க வந்திருந்தார். தனது மனுவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை வைத்திருந்தார்.
அவர்களைக் கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கோகிலா, உணவு வாங்கி வந்து மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்தார். மேலும், அவர்கள் இருவரும் காலணிகள் இல்லாமல் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறும் கால்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததை கவனித்த எஸ்.ஐ. கோகிலா இருவருக்கும் காலணி வாங்கிக் கொடுத்து பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லும்படி வழியனுப்பி வைத்தார். தாத்தாவுக்கு உதவிய சிறுவனின் செயலும், எஸ்.ஐ. கோகிலாவின் செயலும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.