சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை (மார்ச் 7, 2019) காலை 10 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அது, இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக சென்னை காவல்துறையினர், சேலம் மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் ஒவ்வொரு அறையிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடந்தது. ஆட்சியர் அலுவலக வெளிப்புற பகுதிகளிலும் சோதனை நடந்தது.
நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர். அவற்றில் காகித கட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடந்தன. வெடிகுண்டு உள்ளிட்ட மர்மப் பொருள்கள் ஏதும் இல்லை.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த ஆட்சியர் வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இதுபோன்ற வதந்தியைப் பரப்பியிருப்பது தெரிய வந்தது.
சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் எந்த டவர் எல்லையில் இருந்து வந்தது? என்பது குறித்தும், மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் காரணமாக வந்த பொதுமக்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.