சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜயகுமார் சிங் தெரிவித்துள்ளார்.
இரும்பு, மேக்னசைட், பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள், ஜவுளி, ஸ்டார்ச், வெள்ளி கொலுசு, மலர் சாகுபடியில் முக்கிய சந்தை மற்றும் உற்பத்தி கேந்திரமாக சேலம் மாவட்டம் விளங்குகிறது.
வர்த்தக நிமித்தமாக சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசின் சிறு நகரங்களுக்கு இடையிலான விமான சேவை (உடான்) திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.
உடான் திட்டத்தின் கீழ் ஆர்சிஎஸ் எனப்படும் மண்டல அளவிலான வழித்தடத் திட்டத்தின் கீழ் மட்டும் இயக்கப்படும் விமான சேவை கொண்டு வரப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ட்ரூஜெட் நிறுவனம் ஒரே ஒரு பயணிகள் விமானத்தை இயக்கி வந்தது. ஒரே நேரத்தில் அதிகபட்சம் 72 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
ஆரம்ப நிலையில், இந்த நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் 2021ம் ஆண்டுடன் முடிந்த நிலையில் மீண்டும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. எனினும், கரோனா உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே, ட்ரூஜெட் நிறுவனத்தை டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
அதேநேரம், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் பயணிகள் விமானத்தை இயக்க வேண்டும் என்று வர்த்தகர்கள், பொதுமக்களிடையே தொடர்ந்து கோரிக்கை எழுந்தன.
இது தொடர்பாக சேலம் தி.மு.க. எம்.பி., பார்த்திபன், கடந்த 8.12.2021ம் தேதி மக்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசும்போது, சேலம் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின், கடிதங்கள் வாயிலாகவும் நினைவூட்டினார்.
அவருடைய கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜய்குமார் சிங், எம்பி., பார்த்திபனுக்கு கடந்த 31.12.2021ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ''உடான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் கடந்த 25.3.2018ம் தேதி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்த சேவைக்கான மூன்று ஆண்டு ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம் முதல் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பயணிகள் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இன்னும் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.
கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 2- ஆம் தேதி இந்த விமானம் இயக்கப்பட்டது. 68 இருக்கைகள் நிரம்பி இருந்தன. வர்த்தக ரீதியாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை திருப்திகரமாக இருந்து வந்தது. அதனால்தான் மாலை வேளையிலும் விமான சேவையைக் கொண்டு வருவதற்கான பணிகள் அப்போது நடந்தன. அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன,'' என்றார்.
சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ள தகவல் வணிகர்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.