Skip to main content

சிறுவனைக் கடத்திக் கொன்ற வழக்கு; கல்குவாரி காவலாளிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
salem 15 years old child incident salem court judgement

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அய்யாசாமி சாலையைச் சேர்ந்தவர் ஹரி நாராயணன். இவர், நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள ஒரு குவாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் கஜேந்திரன் (வயது 15). தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, மாலையில் சிறுவன் கஜேந்திரன் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அங்கிருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுவன் மாயமானது குறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஹரி நாராயணன் வேலை செய்து வந்த குவாரி நிறுவனத்தில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யநாராயணன், கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இடையில் வேலையில் இருந்து விலகிவிட்ட அவர், தனியாக கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தபோது, சிறுவன் மாயமான சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவரும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த இளம்பரிதி (40) என்பவருடன் சேர்ந்து கஜேந்திரனை கடத்திச் சென்று கொலை செய்ததும், சிறுவனின் சடலத்தை அவர்கள் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் சாலையோரம் வீசிவிட்டதும் தெரிய வந்தது. சத்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளம்பரிதியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சடலத்தையும் கைப்பற்றி விசாரித்தனர்.

சிறுவனின் தந்தை ஹரி நாராயணனிடம் சத்யா கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதே குவாரி நிறுவனத்தில் இளம்பரிதி காவலாளியாக வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுவிட்டனர். எனினும், அவர்களுக்குள் நட்பு தொடர்ந்து வந்துள்ளது. வேலையை விட்டு நின்றுவிட்டதால் பணத்திற்குத் திண்டாடிய இவர்கள், சிறுவனைக் கடத்திச் சென்று அவரின் தந்தையிடம் 5 லட்சம் ரூபாய் கேட்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காகச் சிறுவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாக ஆசை காட்டி அவரைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன், தனக்கு சத்யா மாமா கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார் என்று சம்பவத்தன்று உறவினர்களுக்கு அனுப்பிய எஸ்எம்எஸ்தான் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க துருப்புச் சீட்டாக அமைந்தது. ஆனால், சிறுவன் யதார்த்தமாக உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் செய்ததை அறிந்த சத்யாவும், இளம்பரிதியும் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தால் தங்கள் திட்டத்தைச் சொல்லி விடுவான் என்று கருதி, கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சிறுவனை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, எருமைப்பட்டியில் சாலையோரத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

salem 15 years old child incident salem court judgement

இந்த வழக்கு விசாரணை, சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே, வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த சத்யா 2021ம் ஆண்டு மே மாதம் தலைமறைவாகிவிட்டார். அதன்பிறகு, இந்த வழக்கு இரண்டாகப் பிரித்து விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்ததை அடுத்து, டிசம்பர் 15 ஆம் தேதி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இளம்பரிதிக்கு, சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்திற்கு மற்றொரு ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், இந்த தண்டனைகளை அவர் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.