சேலத்தில், மளிகை கடையில் குட்கா விற்பனை செய்ததாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (53). அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் அந்தக் கடையில் சோதனை நடத்தினர். அங்கிருந்து, 20 குட்கா பொட்டலங்களை கைப்பற்றினர். இதையடுத்து நிர்மலாவை கைது செய்தனர்.
அதேபோல், கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வரும் திருநாவுக்கரசு (42) என்பவரும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரை கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். திருநாவுக்கரசுவின் கடையில் இருந்தும் 20 குட்கா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.