நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மதுபான கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது. சமூக நல்லிணக்கன உறுதிமொழி, மதுவுக்கு எதிரான கோஷங்களை முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் வாயிலில் 2 டாஸ்மாக் கடைகளின் வெளியே இன்று சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகின. மது அருந்துவோர் கூட்டம் கூட்டமாக கடைக்கு வழக்கம்போல் கடை திறந்திருக்கும் நேரத்தில் வருவது போல் அதிகாலையில் இருந்து மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். ஒரு பாட்டிலின் விலை ரூ 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தின் வாயிலில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதன் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, கலால் துறை உள்ளிட்ட எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
மதுவுக்கு எதிராக போராடிய மகாத்மா பிறந்தநாளில் அரசு மது விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் கள்ளத்தனமாக காவல்துறை உதவியுடன் சுதந்திரமாக இதுபோன்று மது விற்பனை நடைபெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என காந்தியவாதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டாஸ்மாக் கடை பேருந்து நிலையம் அருகே உள்ளதால் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறுகிறது. இதனால் டாஸ்மாக் உள்ள சாலைவழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிப்படைகிறார்கள் எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.